பல ஆண்டுகளாக, பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டும் முறையான சுத்திகரிப்பு முறைகளை சாயப்பட்டறை அதிபர்கள் ஏற்படுத்தவில்லை. இத்தனை ஆண்டுகளாக நொய்யல்லாற்றில் கலக்கப்பட்ட கழிவுகளால் நிலம், கால்நடைகள், சுற்றுச்ச்சுழல் என அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதிகளில் அறுநூற்றுக்கும் மேற்பட்டோர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பாதிப்புகளுக்கும் இழப்புகளுக்கும் யார் பொறுப்பு? இவ்வளவு நாளாக கழிவுகளை ஆறுகளில் கொட்டி லாபத்தை பைகளில் திணித்துக்கொண்டவர்கள், இன்று சுத்தீகரிப்பு செலவுகளை ஏற்க மறுத்து ஆலைகளை அடைத்து, தொழிலாளர்கள் வயிற்றிலடிக்கிறார்கள்.
இப்போது, சாயப்பட்டறைகள் நீதிமன்ற உத்தரவினால் அடைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக ஓலமிடுபவர்கள், இதே ஆலைகளில் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்தால் அப்போதும் தொழிலாளர்கள் நலம் பேசுவார்களா?
சாயக்கழிவுகளால் பனியன் தொழிலும் பாதிக்கப்படக்கூடாது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு. அதற்கு தொழில் வளர்ச்சியோடு, சுற்றுச்சூழலையும் காத்தல் மட்டுமே தீர்வு.
தேதி குறிப்பிட்டு சுத்திகரிப்பு முறைகளை ஏற்படுத்த ஆணையிட வேண்டும், தவறினால், ஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.