ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

திருப்பூர் சாய ஆலைகள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டன.

சுத்திகரிப்பு செய்யப்படாத ஆலைக் கழிவுநீருக்கான அபராதத் தொகையில் (லிட்டருக்கு 6 காசு) ஒரு பகுதியைப் பகிர்ந்துகொள்வது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வந்துள்ளதால் (சாய ஆலைகள் செலுத்த வேண்டிய இழப்பீட்டிலும் ஒரு பங்கை ஏற்க முன்வரக்கூடும்) இந்தப் பிரச்சினை இப்போதைக்கு அமைதி கண்டுள்ளது.

தடையற்ற உற்பத்திக்கான தொழிற்சூழல் உருவாதல் மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கம் – சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு ஆற்றில் கலப்பதை தடுக்க நிரந்தர வழிமுறை காண வேண்டும் என்பதுதான். லிட்டருக்கு 6 காசு அபராதம் செலுத்தி, சாயக்கழிவுகளை தொடர்ந்து ஆற்றில் கொட்டிக்கொண்டே இருப்பது அல்ல.

அபராதத் தொகையை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது பற்றி பேசியவர்கள் நச்சு இல்லா இயற்கைச் சாய முறைகளுக்கு மாறுவது குறித்தும் பேசியிருந்தால் மகிழ்ச்சி தருவதாக இருந்திருக்கும்.

இன்று உலகின் முக்கிய நாடுகளில் இயற்கைச் சாயத் துணிகளுக்குத்தான் மதிப்பு தரப்படுகிறது. ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டுள்ள பின்னலாடை நிறுவனங்கள் இயற்கைச் சாய நூல்களை மட்டுமே வாங்குவது என்ற முடிவை மேற்கொண்டால், சாய ஆலைகளும் இயற்கைச் சாய முறைகளுக்கு மாறும்.

பத்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்த இந்த சாயக் கழிவு விவகாரத்தில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் நிலைமை கட்டுக்குள் இருந்திருக்கும். சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்பட்டிருக்கும்.

நொய்யல் ஆறு என்பது திருப்பூருடன் முடிவது அல்ல. அதன் சாயக் கழிவுகள் நிலத்தடி நீரையும் பாதித்துள்ளன. ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்பட்டால், விஷநீர் துணைநதிகள் மூலம் காவிரி வரை வந்து சேர்கிறது.

இந்தத் தீர்ப்பு ஏதோ திருப்பூர் நகருக்கு மட்டுமே உரியதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் அனைத்து நதிகள் குறித்தும் கவலை தெரிவிக்கும் தீர்ப்பு என்பதை எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இதேபோன்ற மோசமான நிலைமை பாலாற்றிலும், காவிரி, பவானி, அமராவதி என அனைத்து நதிகளிலும் நிலவுகிறது. ஆனால் இவைதான் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரம்.

குடிநீருக்காக ஆற்றிலிருந்து பெண்கள் தண்ணீர் எடுத்து வந்த காலம் கனவாய், பழங்கதையாய் மெல்லக் கழிந்து வருகிறது. காவிரியில் குளித்துக் கரையேறும் சுற்றுலாப் பயணிகள் பாட்டில் தண்ணீர் குடித்துத் தாகம் தணிக்கும் நிலைதான் உள்ளது.

அனைத்து நகரக் கழிவுகளும் ஆற்றில்தான் கலக்கின்றன. கழிவுநீரைச் சுத்திகரித்து அவற்றிலிருந்து விவசாயத்துக்கான எரு தயாரிக்கும் திட்டங்கள் எந்த நகரிலும் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை.

வீட்டுக் கழிவுகள் போதாதென்று தொழிற்கூடங்களும் தங்களது சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை ஆற்றில் தள்ளிவிடுகின்றன. சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ளதாகச் சொல்லும் சில தொழிற்கூடங்களும்கூட, மழை நாளில், ஆற்று வெள்ளத்தில் கழிவுகளைத் தள்ளி காலி செய்கின்றன. ஆற்றில் மணல் இருந்த காலத்தில் இந்த கழிவுகள் மணலால் வடிகட்டப்பட்டன. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இப்போது ஆறுகள் அனைத்தும் மணல் இழந்து, கறம்பாகி, படுகையில் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. இவை கழிவுகளை தடுத்து நிறுத்திக் கொள்கின்றன. இத்தகைய ஆறுகள் தான் நமது குடிநீர் ஆதாரம்.