Thursday, March 22, 2012

திருப்பூர்: 535 விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.75 கோடி இழப்பீடு

சென்னை, மார்ச் 21: திருப்பூர் சாயக் கழிவால் சாகுபடி நிலங்கள் பாதிக்கப்பட்டதற்காக வழங்கப்பட்ட ரூ.75 கோடி இழப்பீட்டைப் பெற 535 விவசாயிகளுக்கு மட்டுமே தகுதி உண்டு என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கரூர் மாவட்டம், அரவாக்குறிச்சி வட்டம் வலயப்பாளையத்தைச் சேர்ந்த எம். ராமசாமி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். திருப்பூர் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறிய சாயக் கழிவால் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 68 கிராமங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 449 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட சூழலியல் அழிவைத் தடுப்பதற்கான ஆணையம் கண்டறிந்துள்ளது. நொய்யல் நதிப் பாசனப் பகுதியைச் சேர்ந்த 28 ஆயிரத்து 596 விவசாயிகள் இழப்பீடு பெறத் தகுதியானவர்கள் என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத் துறை கடந்த 31.12.2011 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி நொய்யல் நதிப் பகுதி விவசாயிகளின் இழப்பீட்டுக்காக ரூ.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. எனினும், நொய்யல் நதி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 535 விவசாயிகளுக்கு மட்டும் அந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் வெறும் 535 விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது விதிகளுக்கு முரணானது ஆகும். ஆகவே, இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதிகள் எலிபி தர்மாராவ், எம். வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக சூழலியல் அழிவைத் தடுப்பதற்கான ஆணையம் கடந்த 17.4.2004 அன்று உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. ஆகவே, அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி இப்போது விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. சாயப்பட்டறை உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை, விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வசூலிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ஆகியவை வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. கடந்த 22.12.2006-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நொய்யல் நதி விவசாயிகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே அந்த இழப்பீட்டைப் பெற உரிமை உண்டு. இதன்படி அரசாணை வெளியிடப்பட்டு, அந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இப்போது இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு விட்டது. ஆகவே, இதுபற்றி மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது.எனினும், இழப்பீடு கிடைக்காத நொய்யல் நதி விவசாயிகள் தாங்கள் பாதிக்கப்பட்டதற்கான உரிய ஆதாரங்களுடன் அரசை அணுகினால், அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது பதில் மனுவில் கூறியுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Wednesday, March 21, 2012

சாயப் பட்டறைகளுக்கு மூடு விழா! -ஜூ.வி. அதிரடி ஆக்ஷன்

சாயப் பட்டறைகளுக்கு மூடு விழா! ஜூ.வி. அதிரடி ஆக்ஷன்

'திருப்பூரில் இழுத்து மூடப்பட்ட சாயப் பட்டறைகள், தேனி மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து விட்டன. இங்குள்ள மறைவான மலைப்பகுதிகளைத் தேர்வுசெய்து சிலர் சாயப் பட்டறைகளை நடத்தி வருகிறார்கள். அதில் இருந்து வெளியாகும் சாயக் கழிவுநீர் ஆறு, ஓடைகளில் வழிகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள், பணத்துக்கு ஆசைப்பட்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்’ - என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குத் (044-66808002) தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

தகவல் தெரிவித்த வாசகர்கள் உதவியோடு தேடினோம். தேனி அருகே உள்ள தர்மாபுரி மலை அடிவாரத்தில் இரண்டு சாயப் பட்டறைகளும், ஆண்டிப்பட்டி வைகை ஆற்றங்கரையோரம் டி.வாடி ப்பட்டி அருகே இரண்டு சாயப் பட்டறைகளும் இயங்குவதாக சொல்லப்பட்டதை, மிகுந்த சிரமத்துக்கு இடையில் கண்டுபிடித்தோம்.

தர்மாபுரி மலை அடிவாரத்தில் இயங்கும் சாயப் பட்டறை கண்ணுக்கு சிக்காமல் ரொம்பவே டிமிக்கி கொடுத்தது. கழிவு நீர் துர்நாற்றத்தை வைத்தே அது இயங்கிய இடத்தைக் கண்டுபிடித்தோம். சாயப் பட்டறையின் மூன்று பக்கமும் மலை சூழ்ந்திருக்க... ஒரு பக்கம் வனம். பட்டறையைச் சுற்றி முள்கம்பிகளால் ஆன வேலி. சாயப் பட்டறை தண்ணீர்த் தேவைக்காக புதிதாக ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு இருந்தது. மின்சாரத்துக்காக இரண்டு மிகப்பெரிய ஜெனரேட்டர்கள் இயங்கிக்கொண்டு இருந்தன. ஒரு பக்கம் சலவை ஆலை. இன்னொரு பக்கம் சாய ஆலை. கிட்டத்தட்ட 10 தொழிலாளர்களுக்கும் மேல் வேலை செய்துகொண்டு இருந்தார்கள்.

நம்மை எதிர்பார்க்காத பணியாளர்கள் மிரண்டு போய் வனத்துக்குள் ஓடி ஒழிய... உள்ளே நுழைந்தோம்.

சற்று நேரத்தில் எட்டிப்பார்த்த ஒருவர், சாயப் பட்டறையின் பங்குதாரர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார். ''என் பேரு சிவஞானம். எங்களுக்கு அள்ளிக் கொடுத்து வாழவைத்த திருப்பூர், கைவிட்டு விட்டது. நீதிமன்றத் தீர்ப்பால் இரண்டு ஆண்டு காலமாக சாயப் பட்டறை வேலைகள் முடங்கி விட்டன. இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் அனை வரும் கஞ்சிக்கு வழியில்லாமல் தவிக்கிறோம். வேறு வழி இல்லாமல்தான் சாயப் பட்டறையைத் திருட்டுத்தனமாக நடத்தி வருகிறோம். சாயப் பட்டறை நடத்த மாசுக்கட்டுப்பாடு வாரிய அனுமதி அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், பல லட்ச ரூபாய் செலவு செய்தால்தான் சாயக்கழிவுகளை சுத்திகரிக்க முடியும். முடிந்தவரை இந்தப் பகுதிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் சாயப் பட்டறைகளை நடத்தி வருகிறோம்'' என்று சொன்னார்.

அந்த இடத்தை சுற்றிப் பார்த்தோம். ஓடைகளின் குறுக்கே வனத் துறையினர் கட்டி இருந்த தடுப்பு அணைகளில் சாயக்கழிவுகள் நிரம்பி அருகில் உள்ள தோட்டங்கள் வழியாகப் போனதை காண முடிந்தது. இந்தக் கழிவுகள் தேங்கிய இடங்களில் செடி, கொடிகள், புல் ஆகியவை கருகி இருந்தன.

இன்று, ஒன்றாகத் தொடங்கி இருக்கும் சாயப் பட்டறை மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாளையே பல்கிப் பெருகிவிடும் என்பதால் அங்கு இருந்தபடியே தேனி கலெக்டர் பழனிச்சாமியை தொடர்புகொண்டு விஷயத்தைச் சொன்னோம். ஒரு மணி நேரத்தில் நாம் இருந்த இடத்துக்கு அதிகாரிகள் புடைசூழ வந்தவர், சாயப் பட்டறையை சீல் வைக்க உத்தரவிட்டார். இதுபோலவே மலை அடிவாரத்தில் இயங்கி வந்த இன்னொரு சாயப் பட்டறையும் கலெக்டர் உத்தரவுபடி அப்புறப்படுத்தப்பட்டது. டி.வாடிப்பட்டியில் வைகை ஆற்றின் கரையோரம் இயங்கிவந்த சாயப் பட்டறையை பெரியகுளம் ஆர்.டி.ஓ. அனிதா பார்வையிட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதனை அடுத்து கடந்த 15-ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், பஞ்சாயத்து கிளார்க்குளை அழைத்து மீட்டிங் நடத்திய கலெக்டர், ''கிராமங்களில் உங்களுக்குத் தெரியாமல் சாயப் பட்டறைகளை யாரும் நடத்தவே முடியாது. அதனால், நீங்கள் விழிப்போடு கவனித்து, அனுமதி இல்லாமல் யாராவது சாயப் பட்டறை நடத்தினால் உடனே எனக்குத் தகவல் கொடுங்கள். உங்கள் மூலமாக அல்லாமல், எனக்கு வேறு வழியாகத் தகவல் கிடைத்தால், சாயப் பட்டறைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும்'' என்று எச்சரித்தார்.

சாயப் பட்டறைகள் மீது நமக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. ஆனால், விவ சாயத்தை அழிப்பது சரியல்ல என்பதை சாயப் பட்டறைத் தொழில் அதிபர்கள் உணர வேண்டும். கண்ணுக்குத் தெரியாமல் முறை கேடாக தொழில் நடத்துவதை விடுத்து, அரசு வழிகாட்டுதல்படி சாயப் பட்டறை அமைக்க வேண்டும் என்பதுதான் நம் விருப்பம்.

- இரா.முத்துநாகு