Monday, May 31, 2010

காவிரி போராளி கரூர் குப்புசாமி காலமானார்

திங்கள், 15 பிப்ரவரி 2010
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற தன் வாழ்நாள் முழுவதும் போராடிவந்த கரூர் வழக்கறிஞர் பூ.அர. குப்புசாமி காலமானார்.

காவிரி நதி நீர் சிக்கல் குறித்து மக்கள் மன்றத்திலிருந்து நீதிமன்றம் வரை பல்வேறு தளங்களில் போராடியவர் வழக்கறிஞர் குப்புசாமி. இவர் எழுதிய காவிரி நதி நீர்ச் சிக்கல் புத்தகம், அப்பிரச்சனையை மிக எளிதாக புரிய வைத்தது மட்டுமின்றி, தமிழகத்தின் உரிமையை பறிக்க கர்நாடக அரசும், அரசியல் கட்சிகளும் எப்படியெல்லாம் செயல்பட்டன என்பதையும், அதையெல்லாம் உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தத் தவறிய தமிழக அரசு, தலைவர்கள் குறித்தெல்லாம் அப்புத்தகத்தில் விரிவாக எழுதியிருந்தார்.

வழக்கறிஞசர் குப்புசாமியின் பொது வாழ்க்கை பொதுவுடைமையாளரான ஜீவாவுடன் இணைந்து துவங்கியது. இந்திய பொதுவுடைமைக் கட்சியில் கலை இலக்கிய பெருமன்றத்தை இவரை வைத்து ஜீவா துவக்கினார்.

கரூர் மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த நொய்யல் ஆறு, சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் மாசடைந்தபோது, அதனை எதிர்த்துப் பெரும் மக்கள் இயக்கம் கட்டியவர் குப்புசாமி.

காவிரி நதி நீர்ச் சிக்கலில் அரசியலிற்கு அப்பாற்பட்டு, தமிழின உரிமையை முன்வைத்து சென்னையில் இவர் நடத்திய கருத்தரங்கத்தில், அப்பிரச்சனையில் ஈடுபட்டிருந்த சட்ட வல்லுனர்களையும், நீராண்மை நிபுணர்களையும் அழைத்து பேசச் செய்தார். காவிரி நதி நீர்ப் பிரச்சனையை தமிழகத்தின் உரிமைப் போராகவே கருத வேண்டும் என்று கோரி, அதற்காக பல போராட்டங்களை நடத்தியவர் குப்புசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

80 வயதைக் கடந்த குப்புசாமி சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

No comments:

Post a Comment