Wednesday, June 29, 2011

சாயக்கழிவு நீர் பிரச்னை: இயற்கை முறை ஆவியாக்கலை வரவேற்கும் விவசாயிகள்

தினமலர் »தமிழ்நாடு

கோல்கட்டாவில் இருந்து வந்த பனியன் தொழிலில் ஏற்பட்ட பரிமாண வளர்ச்சி காரணமாக, திருப்பூரை "டாலர் சிட்டி' என்றுஅழைக்கும் வகையில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் நேரடி வர்த்தகம் நடக்கிறது. ஆண்டுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு வர்த்தகம் நடக்கிறது. இதனால், பல்வேறு மாவட்ட மக்களும் திருப்பூரில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.


ஏற்றுமதி வர்த்தகத்தில் வளர்ச்சி நிலையை எட்டியபோது, சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் போட்டியை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களை பின்னுக்கு தள்ள வேண்டுமெனில், மதிப்பு கூட்டப்பட்ட பின்னலாடைகளை தயாரித்து அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக, சாய ஆலைகளில், கண்ணை கவரும் வகையில் சாயமிடப்பட்டது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், பின்னலாடை வர்த்தகத்துக்கு இந்தியாவை தொடர்பு கொள்வதற்கு, நேர்த்தியான முறையில் சாயமிடுவதே, முதல் காரணமாக சொல்லப்படுகிறது. சாயத்தொழிலில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்திய பின், 4,000 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி வர்த்தகம் அசுர வேகத்தில் வளர்ந்து, 12 ஆயிரம் கோடியை தாண்டியது. சாயத்தொழில் பங்களிப்புடன் மிடுக்கு நடையுடன் முன்னேறி வந்த பனியன் தொழிலுக்கு, சாயத்தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நொய்யல் ஆற்றில் விடப்பட்ட சாயக்கழிவு நீரால், விவசாயிகள் பாதிப்படைந்து, வழக்கு தொடர்ந்தனர். அப்போது, "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தி, நொய்யலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட விட மாட்டோம் என தொழில் துறையினர் உறுதியளித்தனர். கடந்த 2006 முதல் "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் அமலுக்கு வந்தது. உலக நாடுகள் முயற்சி செய்தும், செயல்படுத்த முடியாத அத்தொழில்நுட்பத்தை, எவ்வித தொழில்நுட்ப வழிகாட்டுதலும் இல்லாமல், சாய ஆலை உரிமையாளர்கள் அமைத்தனர்.


கழிவு நீரில் இருந்து ரசாயனம், கலர் மற்றும் துர்நாற்றத்தை நீக்கிவிட்டு, 4,000 முதல் 5,000 டி.டி.எஸ்., திறனுள்ள சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. அதற்காக, எட்டு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வந்தன. "ஜீரோ டிஸ்சார்ஜ்' ஒப்பந்தம் ஏற்பட்ட பின், அவை மேம்படுத்தப்பட்டன; கூடுதலாக 12 நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. மொத்தம், 803 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டன.


சுத்திகரிப்பு வழிமுறை: வழக்கமான முதல்கட்ட சுத்திகரிப்புக்கு பின், கழிக்கப்படும் கழிவுநீர் ஆர்.ஓ., (ரிவர்ஸ் ஆஸ்மாஸ்சிஸ்) தொழில்நுட்ப முறையில் சுத்திகரிக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் செலுத்தப்படும் கழிவுநீரில், 85 சதவீதம் அளவுக்கு சுத்தமான தண்ணீராக திரும்ப பெறப்பட்டு, மறுசுழற்சி முறையில் சாயமிட பயன்படுத்தப்பட்டது. திருப்பூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில், ஆர்.ஓ., சுத்திகரிப்பு வரை, எவ்வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. அடுத்த நிலைகளில் தான், பெரிய அளவில் சோதனைகள் ஏற்படுகின்றன.


"மல்டிபிள் எவாப்ரேட்டர்' முறை: ஆர்.ஓ., சுத்திகரிக்கப்பட்ட, 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் டி.டி.எஸ்., வரை அதிக உப்புத்திறன் கொண்ட 15 சதவீத கழிவு நீரை, ஆவியாக்கல் மூலமாக சுத்திகரிக்க "மல்டிபிள் எவாப்ரேட்டர்' மெஷின்கள் அமைக்கப்பட்டன. அதிக விறகுகளை எரித்து, மின்சாரம் மற்றும் குறைந்த காற்றழுத்தத்தில், கழிவுநீர் ஆவியாக்கப்பட்டது. அதில், 90 சதவீத கழிவுநீர் ஆவியாகிறது; மீதமாகும் கழிவில் "கிரிஸ்டிலைசர்' மூலமாக எஞ்சியுள்ள கழிவு குளிர்விக்கப்பட்ட உப்பாக மாற்றப்படுகிறது. இரண்டு லட்சம் டி.டி.எஸ்., அளவுள்ள தண்ணீர் கழிக்கப்பட்டு, சூரிய களத்தில் ஆவியாக்கப்படுகிறது.


சாய ஆலைகள் மூடல்: குறைந்த அளவு தண்ணீரை சுத்திகரிக்க "எவாப்ரேட்டர்' முறை ஏற்கப்பட்டாலும், தினமும் லட்சக்கணக்கான லிட்டர் சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வது சாத்தியப்படவில்லை. அதிக மின்திறன் மூலமாக மெஷின்களை இயக்கியும், எதிர்பார்த்த அளவு சுத்திகரிப்பு செய்யவில்லை. இதனால், "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் சாத்தியமற்றது என்று ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதனால், சாயக்கழிவு சுத்திகரிப்பு தடம் மாறியது. மீண்டும் கழிவுநீர் ஆற்றில் சென்றதால், விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில், "கோர்ட் அவமதிப்பு வழக்கு' தொடர்ந்தனர். இதன் காரணமாகவே, "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை 100 சதவீதம் நிறைவேற்றும் வரை, அனைத்து சாய சலவை ஆலைகளையும், சுத்திகரிப்பு நிலையங்களையும் மூட வேண்டுமென கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பிப்., 2ம் தேதி முதல் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன; அன்று முதல் சாய ஆலைகள் மூடிக்கிடக்கின்றன.


பிரச்னைக்கு தீர்வு என்ன? "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில் நுட்பத்தில், "எவாப்ரேட்டர்' சுத்திகரிப்பு பிரிவு மட்டுமே எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. அதற்கு மாற்றாக, குறைந்த இயக்க செலவில், ஆர்.ஓ.,வில் ஒதுக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கான வழிமுறைகளை கண்டறிவதில் பலரும் முயற்சித்தனர். இறுதியாக, திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரியினர், மிக குறைந்த செலவில் இயற்கை முறையில் ஆவியாக்கும் திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.


இயற்கை வழி ஆவியாக்கல்: கடந்த ஆண்டுகளில், ஜெர்மன் நாட்டில், கடல் நீரில் இருந்து உப்பு தயாரிக்கப்பட்ட இத்தொழில்நுட்பம், இன்று சாயக்கழிவு நீரை சுத்திகரிக்க வழிகாட்டியுள்ளது. நிச்சயமாக, இத்தொழில்நுட்பத்திலும், "ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பை சாத்தியமாக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆர்.ஓ., சுத்திகரிப்புக்கு பின், வெளியேற்றப்படும் கழிவுநீரை ஆவியாக்கி, உப்பாக மாற்ற இத்தொழில்நுட்பம் வழிகாட்டுகிறது.


நிப்ட்-டீ கல்லூரி தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது: திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி சார்பில் நடந்த ஆய்வில், ஜெர்மனியில் கடல் நீரில் இருந்து உப்பு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில், கழிவுநீரை சுத்திகரிப்பது குறித்து ஆராயப்பட்டது. கடந்த ஜன., மாதம் பெருந்துறை "சிப்காட்'டில் உள்ள சாய ஆலைகளில், மாதிரி கட்டமைப்பு அமைக்கப்பட்டு, இயற்கை முறையில் ஆவியாக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு திட்டக்குழு முழு நேர உறுப்பினர் குமாரவேலு, இத்திட்டத்தின் நன்மைகளை அரசுக்கு எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் முன்னிலையில் விளக்கப்பட்டது. நிப்ட்-டீ கல்லூரி சார்பில், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்முனை வோர், தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு, "பசுமை ஜவுளி இயக்கம் (ஜி.டி.எம்.,)' துவக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில், இரண்டு முறை ஜெர்மன் சென்று "பெர்லின்' பல்கலை பேராசிரியர் ப்ளோரியன் ஷிண்ட்லரை சந்தித்து கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில், 20 மீட்டர் நீளத்தில், மாதிரி வடிவமைப்பு அமைக்கப்பட்டு, "எகோ கிரீன் இன்டஸ்ட்ரியல் எவாப்ரேட்டர்' என்ற பெயருடன், கடந்த மார்ச் 7ம் தேதி கழிவுநீரை ஆவியாக்கும் பணி துவக்கப்பட்டது. சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு, இந்திய தொழில்நுட்ப கழக ஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த பரிந்துரையை ஏற்று, ஆராய்ச்சியாளர்கள் லிஜ்ஜி பிலிப் தலைமையிலான குழுவினர், கடந்த மார்ச் 15ம் தேதி மாதிரி கட்டமைப்பை பார்வையிட்டனர். இயற்கை முறை ஆவியாக்கல் தொழில்நுட்பம் ஏற்றதாக இருப்பதால், பருவ மாற்ற நேரங்களில் பயன்படுத்துவது தொடர்பாக, ஒன்பது மாத ஆராய்ச்சி நடத்தி அறிக்கை அளிக்க, இந்திய தொழில்நுட்ப கழகம் முடிவு செய்துள்ளது, என்றார்.


பெருந்துறையில் இயற்கைமுறை ஆவியாக்கல்: பெருந்துறை சிப்காட்டில் இயங்கும் "ப்ரீலுக் பேஷன்ஸ்' நிறுவனம், இயற்கை முறையில் ஆவியாக்கும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளதால், திருப்பூரில் உள்ள தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும், அத்திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன.


அந்நிறுவன நிர்வாக இயக்குனர் மோகன் கூறியதாவது: இயற்கை முறை ஆவியாக்கல் திட்டத்தை கேள்விப்பட்டதும், கடந்த டிச., மாதத்தில் மாதிரி கட்டமைப்பு மூலமாக, மாதிரி ஓட்டம் நடத்தப்பட்டது. அதில், சரியாக ஆவியாதல் நடந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிலையை அறிய, மிக அருகிலேயே, பூந்தோட்டம் அமைக்கப்பட்டது; மனிதர்களும் உலாவினர். யாருக்கும் பிரச்னை ஏற்படவில்லை. எந்நேரமும் ஈரமான காற்று வீசுவதால், செடிகள் நன்கு செழித்து வளர்ந்தன. அதன்பின், அரை ஏக்கர் பரப்பளவு நிலத்தில், 20 மீட்டர் நீளம், 2.5 மீட்டர் அகலம், 10 மீட்டர் உயரம் என "ப' வடிவத்தில் அமைக்கப்பட்டது. இருபுறமும் தலா, 15 மீட்டர் அளவுக்கு இடைவெளியுடன், தென்வடல் திசையில் ஆவியாக்கும் மையம் வடிவமைக்கப்பட்டது. அழிக்க வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ள, "புளூகம்' மரங்கள் மற்றும் முட்செடிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேடைகளுக்கு தார்கோட்டிங் பூசப்பட்டு, 316 எஸ்.எஸ்., ஸ்டீல் நட்டுகள் மூலமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மேலிருந்து வடியும் கழிவுநீர் உறிஞ்சப்படக்கூடாது என்பதற்காக, மாசுக்கட்டுப்பாடு வாரியம் பரிந்துரைத்த, பிளாஸ்டிக் சீட்டுகளும் (ஜி.இ.ஓ., மெமரைன்) விரிக்கப்பட்டுள்ளன.


கடந்த சில மாதங்களாக, ஆர்.ஓ.,வில் கழிக்கப்படும் கழிவுநீரில், தினமும் 50 ஆயிரம் லிட்டர் இதன் மூலமாக ஆவியாக்கப்படுகிறது. நாள் முழுவதும் 7.5 எச்.பி., மோட்டார் இயக்க மட்டுமே செலவு செய்யப்படுகிறது. கட்டமைப்பு அல்லாத வேறு எவ்வித பராமரிப்பு செலவும் ஏற்படுவதில்லை. இயந்திர சுத்திகரிப்பு முறையாக இருந்தால், தினமும் 18 டன் விறகு, அதிக திறனுள்ள மின்சாரம், அதிக தொழிலாளர்கள் என தினமும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இயற்கை முறை ஆவியாக்கலில் எவ்வித செலவும் இல்லை. எதிர்பார்த்த அளவு வெற்றிகரமாக ஆவியாவதால் மேலும், கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட உள்ளது. காற்று அதிகம் வீசும் நேரங்களில், மேலிருந்து கீழ்நோக்கி வடியும் கழிவுநீர் சிதறாமல் இருக்க, சாக்கு போன்ற துணைகள் தற்காலிகமாக கட்டப்படுகின்றன. இயந்திர சுத்திகரிப்பு போலவே, இயற்கை வழி சுத்திகரிப்புக்கு பிறகும், "கிரிஸ்டலைசர்' மூலமாக, உப்பு எளிதாக பிரித்தெடுக்கப்படுகிறது. அதன் பின், எஞ்சியுள்ள தண்ணீரை மீண்டும் சுத்திகரித்து உப்பாக மாற்றவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.


திருப்பூர் ஆலைகள் விருப்பம்: இயற்கை முறையில் ஆவியாக்கும் திட்டம் எதிர்பார்த்த அளவு வெற்றியடைந்து விட்டதால், வைகிங் பிராசஸ், ஜே.வி.,டையிங், கே.பி.ஆர்., டையிங், பிளவர் பிராசசர்ஸ், எஸ்.எஸ்.எம்., பிராசஸ், ஆம்ஸ்ட்ராங் பிராசஸ் ஆகிய சாய ஆலைகளும், இத்தொழில் நுட்பத்தை அமைப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.


விவசாயிகள் வரவேற்பு: நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபை தலைவர் கந்தசாமி கூறியதாவது: பெருந்துறை "சிப்காட்'டில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை முறையில் சாயக்கழிவு நீரை ஆவியாக்கும் மையத்தை, விவசாயிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்துள்ளனர். தற்போதைய பிரச்னைகளுக்கு, இயற்கை முறையில் ஆவியாக்கும் திட்டம் கை கொடுக்கும். வரவேற்புக்கு உரிய, அருமையான அத்திட்டத்தை செயல்படுத்தும்போது, ஒரு சொட்டு தண்ணீரை கூட, ஆற்றில்விட வேண்டிய அவசியம் ஏற்படாது. திருப்பூர் தொழில் துறையினர் அதுகுறித்து சிந்தனை செய்ததாக தெரியவில்லை. மழைகாலத்தில் மட்டும் சுத்திகரிப்பை குறைக்க வேண்டிய நிலை ஏற்படலாம்; அதற்கும் சரியான மாற்றுவழியை விரைவில் கண்டறிவர். செலவு குறைவாக ஏற்படும் என்பதால், அரசு இத்திட்டத்தை செயல்படுத்த ஆவன செய்தால், தொழில் துறையினரும், விவசாயிகளும் பயனடைவர், என்றார்.


ஒரு லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்க செலவு


* இயந்திர ஆவியாக்கல் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு, தினமும் 80 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டும்; இயற்கை முறையில் தினமும், 2,500 ரூபாய் மட்டும் செலவு செய்தால் போதும். இயற்கை முறை ஆவியாக்கல் தொழில்நுட்பத்தை, அதிக கழிவுநீரை சுத்திகரிக்கும் பொது சுத்திகரிப்பு நிலையங்களிலும் செயல்படுத்தலாம்.


* இயந்திர சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்த, மேலும் 10 கோடி ரூபாய் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். தினமும் ஏற்படும் இயக்க செலவுகளுக்காக, எட்டு முதல் 10 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். இயற்கை முறை ஆவியாக்கும் தொழில்நுட்பத்துக்கு, தினமும் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் போதும்.


*"எகோ கிரீன் எவாப்ரேட்டர்' கட்டமைப்புக்கான முதலீட்டில், மொத்த செலவையும், ஐந்து முதல் ஆறு மாதங்களில் திரும்ப எடுக்கலாம்.


இயற்கை வழி ஆவியாக்கலின் நன்மை


*30,000 டி.டி.எஸ்., (தண்ணீரில் கரையும் உப்புத்திறன்) அளவுள்ள ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை தொடர்ந்து செலுத்தும்போது, இரண்டு லட்சம் டி.டி.எஸ்., உப்புத்தன்மையுள்ள 10 ஆயிரம் லிட்டர் கழிவு நீராக மாறுகிறது. மீதமாகும், 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர், வழக்கம்போல், "கிரிஸ்டைலசர்' மூலமாக உப்பாக மாற்றப்படுகிறது. இவ்வழிமுறையில், தண்ணீர் மிஞ்சாமல் போவதால், "ஜீரோ டிஸ்சார்ஜ்' நிபந்தனை எளிதில் சாத்தியமாகிறது.


*"மல்டிபிள் எவாப்ரேட்டர்' மூலமாக ஆவியாக்கும்போது, தினமும் 18 டன் அளவுக்கு விறகு தேவைப்படும்; இயற்கை முறை ஆவியாக்கலில், விறகு எரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாக கிடைக்கும் சூரிய சக்தி மற்றும் வாயு சக்தி மூலமாகவே ஆவியாக்கப்படுகிறது.


*தண்ணீரை மேலே எடுத்துச்செல்லும் மின்மோட்டார் அளவுக்கு மின்சாரம் இருந்தாலே போதும்; சூரிய களங்களில் தேக்கி வைக்க அவசியம் இல்லாததால், அதிக பரப்பளவில் சூரிய களங்கள் அமைக்க வேண்டியதில்லை.


*திருப்பூரில் தினமும் ஒன்றரை கோடி லிட்டர் தண்ணீரை ஆவியாக்குவதால், சுற்றுப்பகுதியில் மழைப்பொழிவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


*தனித்திறமை வாய்ந்த தொழிலாளர்கள் தேவையில்லை; சாதாரண தொழிலாளர்களே இத்தொழில்நுட்பத்தை இயக்க முடியும்.


தற்போது நடைமுறையில் உள்ள "மல்டிபிள் எவாப்ரேட்டர்' தொழில்நுட்பத்திற்கும், இயற்கைமுறை ஆவியாக்கலுக்கும் உள்ள வேறுபாடு:


*"மல்டிபிள் எவாப்ரேட்டர் ' மெஷின்களை இயக்க, திருப்பூருக்கு மட்டும் தினமும் 3,300 டன் அளவுக்கு விறகு தேவைப்படுகிறது; இயற்கை முறையில் விறகு தேவையில்லை.


*மெஷின்களை இயக்க, மின் செலவு இரண்டு மடங்கு அதிகரிக்கிறது; இயற்கை முறையில், ஒரு மோட்டார் மட்டும் இயக்கினால் போதும்.


*அதிக மின்சாரமும், விறகும் பயன்படுத்தப்படுவதால், தற்போது அதிக கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியேறுகிறது; இயற்கை ஆவியாக்கல் தொழில்நுட்பத்தில், கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு வெளியேற வாய்ப்பில்லை.


*"எவாப்ரேட்டர்' மெஷின்களை இயக்குவதற்கு, ஆர்.ஓ., சுத்திகரிப்பு வரையிலான மொத்த செலவில், இரண்டு மடங்கு அளவுக்கு செலவிட வேண்டும். இயற்கை ஆவியாக்கல் முறையில், குறைந்த செலவில் ஆவியாக்கலாம். மேலும், கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேறுவது தவிர்க்கப்படுவதால், "கார்பன் கிரெடிட்' சலுகை பெற வாய்ப்புள்ளது.


சாத்தியமில்லாத அணுகுமுறை: சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு, ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் தீர்வு காண முயற்சித்து வருகின்றனர். சாய ஆலை நிர்வாகங்கள், 2,100 டி.டி.எஸ்., உப்புத்திறனுள்ள சாயக்கழிவு நீரை வெளியேற்ற அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன் வைத்துள்ளன.


* "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை சுப்ரீம் கோர்ட் அங்கீகரித்துள்ளதால், அதை மாற்றும் அதிகாரம் சென்னை ஐகோர்ட்டுக்கும் இல்லை. மீண்டும் கழிவுநீரை ஆற்றில்விட, விவசாயிகளும் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை.


* சாய ஆலைகளுக்கு தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆர்.ஓ., சுத்திகரிப்பால், 80 முதல் 85 சதவீத தணணீர் மறுசுழற்சி முறையில் பெறப்படுவதால், தினமும் இரண்டு கோடி லிட்டர் மட்டுமே தேவைப்படுகிறது.


* 5,000 முதல் 6,000 டி.டி.எஸ்., வரையுள்ள கழிவுநீரை 2,100 டி.டி.எஸ்., அளவுக்கு குறைக்க, 20 கோடி லிட்டர் நல்ல தண்ணீரை கலக்க வேண்டும். இதனால், ஒரு நாளைக்கு 30 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும்; தினமும் 28 கோடி லிட்டர் தண்ணீர் விரையமாகும்.


* இதில், 2,100 டி.டி.எஸ்., அளவுக்கு கழிவு நீரை வெளியேற்றும் நிலைக்கு மாறினால், 1,50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் பயனற்று போகும்.


* தற்போது, சுத்திகரிப்புக்கு அதிக மின்செலவும், விறகு செலவும் ஏற்படுவதாக கூறுகின்றனர். இந்நிலையில், 2,100 டி.டி.எஸ்., அளவு முறையிலும், நல்ல தண்ணீர் வாங்க அதிக செலவாகும் என்பதால், அத்திட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்படுமா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. மேலும், அனைத்து ஆலைகளும் சரியாக செயல்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதும் சாத்தியமில்லாதது.


கடலுக்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளதா? திருப்பூரில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலுக்கு சாயக்கழிவு நீரை எடுத்துச் செல்வது நடைமுறை சாத்தியம் வாய்ந்ததா என்பதை ஆராய வேண்டும். கடலில் கலக்கும் திட்டத்துக்கு, 1,500 முதல் 2,000 கோடி ரூபாய் வரை செலவாகும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக திட்டத்தை துவக்கினாலும், பணிகள் முடிய நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாகும்; அதுவரை சாயக்கழிவை அகற்றுவதற்கு தீர்வு என்ன? கடலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் போதும், சாயக்கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டும்; சுத்திகரிப்பு செலவை குறைக்க முடியாது; டி.டி.எஸ்., அளவை மட்டுமே மாறுபடும். சாயக்கழிவு நீரை கடலுக்கு கொண்டு செல்ல, வழியோர கிராமங்கள், மீனவர்கள், கடலை சுற்றியுள்ள நாடுகள் என பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவ்வளவு பிரச்னைகளையும் தாண்டியே, கடலுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை பற்றி முடிவெடுக்க முடியும். கோர்ட் உத்தரவுப்படி, "ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' என்ற நிலையை அடைவதை தவிர வேறு வழியில்லை என்பது தெளிவாகிறது. இதற்கு இயற்கை முறையில் ஆவியாக்கும் திட்டம் ஒன்றே, சாயத்தொழில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமைய வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


சாயப்பிரச்னை, கோர்ட்டில் இதுவரை....


"சாய ஆலை உரிமையாளர்களின் ஒப்புதலுடன், "ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தி, ஒரு சொட்டு கழிவுநீரை கூட வெளியேற்றக்கூடாது,' என, 2006ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.


கடந்த 2006ம் ஆண்டு டிச., 22ம் தேதி வெளியான உத்தரவு விவரம்:


* 2007ம் ஆண்டு ஜூலை 31க்குள் "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.


* ஜன., 1ம் தேதி முதல் ஜூலை 31 வரை, வெளியேற்றப்படும் கழிவுநீருக்கு, லிட்டருக்கு ஆறு, எட்டு மற்றும் 10 காசு வீதம் இழப்பீடு செலுத்த வேண்டும்.


* ஒரத்துப்பாளையம் அணையை சுத்தப்படுத்த ஏற்படும் செலவு 12.50 கோடி ரூபாயில், 2007 ஏப்., 30ம் தேதிக்குள் மீதமுள்ள 8.5 கோடி ரூபாயை இரு தவணைகளில் செலுத்த வேண்டும்.


* சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டுத்தொகை 24.79 கோடி ரூபாயில், மீதியுள்ள 22.99 கோடி ரூபாயை, ஏப்., 30க்குள் செலுத்த வேண்டும்.


* 2005, 2006 மற்றும் 2007ம் ஆண்டுக்கான இழப்பீடு தொகையாக, 12 கோடி ரூபாயை இரண்டு தவணைகளாக ஜூலை 31க்குள் செலுத்த வேண்டும்.


* ஜூலை 31க்குள், "ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' கட்டமைப்பை நிறைவேற்றாத நிறுவனங்கள் உடனடியாக மூடப்படும் என்று உத்தரவிடப்பட்டது.


திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், 2007ம் ஆண்டு மே 18ம் தேதி இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இரண்டரை ஆண்டுகள் விசாரணை நடந்து, 2009ம் ஆண்டு அக்., 6ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. சாயக்கழிவால், சுற்றுச்சூழல் மற்றும் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது; விவசாயமும் பாதிப்படைந்துள்ளது. பாதிப்பை சரிசெய்து, பழைய நிலைக்கு திருப்பும் பொறுப்பு, சாய ஆலைகளையே சாரும். எனவே, சாய ஆலைகளே செலவை ஏற்க வேண்டும். சென்னை ஐகோர்ட் 20006ம் ஆண்டு டிச., 22ல் வெளியிட்ட உத்தரவை அப்படியே முழுமையாக நிறைவேற்ற வேண்டும். "ஜீரோ டிஸ்சார்ஜ்' கட்டமைப்பு, நிவாரணம், அபராத தொகை என அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து உத்தரவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.


அதன் பிறகும், சாயக்கழிவு நீர் ஆற்றில் ஓடுவது தொடர்ந்ததால், கடந்த 2010ல் விவசாயிகள் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இம்முறை கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை முடிந்து, கடந்த ஜன., 28ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில், "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வரை, திருப்பூரில் உள்ள சாய சலவை ஆலைகளை உடனடியாக மூடி, மின் இணைப்பை துண்டிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. அதேநேரத்தில், மாசுக்கட்டுப்பாடு வாரியம், கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்தி, தகுதி வாய்ந்த ஆலைகளுக்கு இசைவாணை வழங்கலாம் என்றும், சாயக்கழிவு நீரை வெளியேற்றிய நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. சாய ஆலை உரிமையாளர்கள் தரப்பில், கூடுதல் அவகாசம் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை இடைமறித்து ஏமாற்றும் முயற்சி என கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.


"சுத்திகரிப்பில் இயற்கை மூலிகை': ""இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சுத்திகரிப்பு கலவையால், "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் சாத்தியம்,'' என்று ஆராய்ச்சியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


அவர் கூறியதாவது: சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு பணிக்கு இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கலவைகள் கண்டறியப்பட்டுள்ளன. சுத்திகரிப்பு பணிக்காக, 100 சதவீத மூலிகை கலவைகளை பயன்படுத்தினால், பக்கவிளைவு ஏற்படாது. தோல்வியாதி, கண் எரிச்சல் என எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. கால்சியம், மெக்னீசியம், சோடியம், காப்பர், சல்ப்பர் என அனைத்தும் தனித்தனியாக பிரிந்து விடுகின்றன. கலர் மற்றும் துர்நாற்றம் நீங்கி விடுகிறது. இதுபோன்ற முயற்சிகளால், கூவம் ஆற்றில் இருந்த பாக்டீரியாக்கள் அழித்து காண்பிக்கப்பட்டன. மேலும், விவசாயம், கிணறுகள், குளம், குட்டைகள் போன்றவை மாசுபட்டிருந்தாலும், சரி செய்யப்படும். இயற்கை மூலிகை சுத்திகரிப்பு பயன்பாட்டால், வழக்கத்தை காட்டிலும், இயற்கை முறையில் ஆவியாக்கும்போது இரண்டு மடங்கு அதிகமாக ஆவியாகிறது. முட்செடிகளை பயன்படுத்துவதால், கழிவுநீர் கறுப்பாக மாறி, உப்பாக மாற்றும்போதும், வெள்ளை நிறமாக கிடைப்பதில்லை. மூலிகை கலவைகளை பயன்படுத்தினால், கழிவுநீர் கறுப்பு நிறத்துக்கு மாறுவதில்லை. இதனால், சோடியம் உப்பு வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. ஒவ்வொரு பொருளும் தனித்தனியாக பிரிவதால், இறுதியாக "ஸ்லட்ஜ்' போன்ற திடக்கழிவுகள் தேங்குவதில்லை, என்றார்.


Thursday, June 9, 2011

Talks on Tirupur dyeing units inconclusive

CHENNAI: The meeting convened by industries minister C Shanmugavelu on Monday to find a solution to the crisis that has gripped the Tirupur dyeing units ended without any decision being taken.

Representatives of six farmers' associations participated in the two-hour-long meeting, also attended by chief secretary Debendranath Sarangi and officials of the industries department. The farmers demanded strict implementation of the court order to ensure zero liquid discharge from the dyeing units, said KC Kulandaisamy, president of the association of farmers affected by the pollution of Orathapalayam dam. "We pointed out that groundwater and waterways were getting polluted due to the release of effluents from the dyeing units. The government should take action against the units that are clandestinely functioning, violating the court order," he told TOI.

Later, Shanmugavelu held discussions with representatives of dyeing unit owners and textile exporters. "We explained to the minister that more than 20 lakh people are affected by the court order. We expect the government to mediate for an amicable solution to the issue. If ensuring zero liquid discharge is the only solution, the government should finance the effluent treatment plants," Divyar S Nagaraj, president of dyeing unit owners' association told TOI.