ஆனால் உண்மை அதுவல்ல. எத்தனையோ தடைகளை கடந்து கோவையை நோக்கி வரும் நொய்யலுக்கும் ஒரு பின்னணி உண்டு. நொய்யல் ஆறு எங்கிருந்து எப்படி உருவாகிறது என தெரிந்துகொண்டால் அதை நாம் போற்றத் துவங்கி விடுவோம்.
மேற்கு தொடர்ச்சி மலையில் கோவைக்கு மேலே சரியாக 2 ஆயிரம் அடி உயரத்தில் பெய்யும்போது அது பல்வேறு சிறு ஓடைகளாக உருப்பெறுகிறது. இப்படி 7 ஓடைகள் ஒன்று சேர்ந்து அது குஞ்சரான் முடி என பெயர் பெற்று மலைகளில் இருந்து பெரும் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதுதான் நீங்கள் சிறுவாணி அடிவாரத்தில் காணும் கோவை குற்றாலம் இதை பெரியாறு என்றும் அழைக்கிறார்கள்.
மற்றொரு புரத்தில் ஏறத்தாழ வெள்ளிங்கிரி மலையிலும். அதை ஒட்டிய பகுதிகளிலும் பெய்யும் மழை, 5 ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை என பெயர் பெற்று ஏற்கனவே ஓடிவரும் பெரியாறுடன் செம்மேடு அருகே ஒன்று சேர்கிறது.
இந்த பெரியாறு மட்டும் நொய்யல் என அழைக்கப்படுவதில்லை.
இத்துடன் தூத்துமலை ஓடை, கொடுவாய்புடி ஓடை பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து சின்னாறு என அழைக்கப்படுகிறது. இந்த சின்னாறு சாடி வயல் வழியாக நாம் ஏற்கனவே கூறிய பெரியாறுடன் சோலை படுகையில் ஒன்று சேர்கிறது. அவ்வளவு தானா நொய்யல் என கேட்க வேண்டாம்.
பெரியாறு சின்னாறு சேர்ந்த உடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் 20 ஓடைகளை ஒன்று சேர்த்துவரும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறும் தொம்பிலிபாளையத்தில் ஒன்று சேர்கிறது. இந்த தொள்ளாயிரம் மூர்த்தி கண்டிதான் நீங்கள் சினிமாவில் பார்த்த வைதேகி நீர்வீழ்ச்சி.
தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய எல்லா ஆறுகளும் ஒன்று சேர்ந்த பின்னர்தான் அங்கு நொய்யல் என பெயர் பெறுகிறது.
பின்னர் பேரூர், கோவை நகர், சூலூர், திருப்பூர், கொடுமணல், காங்கயம் வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் நமது ஜீவ நதி கலக்கிறது.
நொய்யலின் சராசரி நீளம் 160 முதல் 170 கிலோ மீட்டர். இந்த ஆற்றின் சராசரி அகலம் 30 அடி. நொய்யலில் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பு அணைகள் 32. நொய்யல் ஆற்று நீரை நம்பி தற்போது உள்ள குளங்களின் எண்ணிக்கை 19.
நொய்யல் ஆற்றில் ஆண்டு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. ஆனால் ஏறத்தாழ ஆலந்துறை வரை ஆண்டுக்கு 10 மாதங்கள் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீரையும் மழை காலத்தில் கிடைக்கும் பெரும் வெள்ளத்தையும் நாம் முறைாக பயன்படுத்தினால் இன்னும் 20 ஆண்டுகளுக்கு கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சமே வராது.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது அதை தடுப்பணையில் தடுத்து அங்கிருந்து சிறிய வாய்கால்கள் மூலம் குளங்களுக்கு நீரை கொண்டுசெல்லும் முறை நொய்யலில் பயன்படுத்தப்படுகிறது. நொய்யலில் பெரும் வெள்ளம் செல்லும்போது பலரும் இந்த நீரை அப்படியே குளங்களுக்கு திருப்பினால் என்ன என கேள்வி கேட்கின்றனர். இது மிகவும் அபாயகரமானது. காரணம் நொய்யல் ஆற்றில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதன் வேகம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும். இந்த நீரை குளங்களுக்கு திருப்பினால் ஒரு சில மணி நேரங்களில் குளம நிரம்பிவிடும். பின்னர் இந்த நீரை தடுக்க இயலாமல் குளமே காணாமல் போய்விடும். எனவே தான் நொய்யல் ஆற்று நீரை தடுத்து வாய்க்கால்கள் மூலம் குளங்கள் நிரப்பப்படுகிறது. கிளை வாய்க்கால்கள் மூலம் குளங்களை நிரப்பும் முறை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்திலும் பின்னர் மதுரையில் பாண்டிய மன்னர்கள் காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நொய்யல் என கூடுதுறையில் பெயர் பெற்றதும் இந்த ஆறு கோவையை நோக்கி ஓடி வருகிறது. நொய்யலில் குறுக்கே எந்த தடுப்பு இருந்தாலும் அதை தகர்த்துக் கொண்டு ஓடி வருவதற்கு காரணம் உள்ளது.
கூடுதுறையில் இருந்து ஒவ்வொரு 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ஒரு மீட்டர் தாழ்வாக நொய்யல் அமைந்துள்ளது. எனவே 30 கிலோ மீட்டர் தூரமுள்ள கோவைக்கு நொய்யல் வரும்போது அதன் நிலை 15 மீட்டர் கீழே இறங்கியுள்ளது.
இது கோவை வரை மட்டுமல்ல. காவிரி ஆற்றுடன் கலக்கும் வரை இதே போல இயற்கையாகவே நொய்யலில் அமைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் நொய்யல் ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது.