Saturday, October 1, 2011

நொய்யல் பாயும் குளங்களில் அவலம் :

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால், நகரிலுள்ள குளங்கள் அனைத்தும் கழிவுகளின் சங்கமமாக மாறி வருகின்றன. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 8 குளங்கள் அமைந்துள்ளன. நொய்யல் ஆறு பாய்ந்து வரும் இந்த குளங்கள் அனைத்தும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போதே, சாயக்கழிவு நீர் மற்றும் கழிவுநீர் அனைத்தும், கால்வாய்கள் வழியாக இந்த குளங்களில் சங்கமித்து வந்தன. இவற்றைத் தடுக்கவும், அழிந்து வரும் இந்த குளங்களுக்கு புத்துயிர் கொடுக்கவும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில் புதிய திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, இங்குள்ள 8 குளங்களையும் புனரமைக்க 126 கோடி ரூபாய் மதிப்பில், "விரிவான திட்ட அறிக்கை'யும் தயார் செய்யப்பட்டது.இத்திட்டத்தில் மத்திய அரசின் 50 சதவீத மானியத்தைப் பெற வேண்டுமெனில், சம்மந்தப்பட்ட குளங்கள் அனைத்தும் மாநகராட்சி வசமிருக்க வேண்டுமென்று கூறி, பொதுப்பணித்துறையிடம் போராடி இந்த குளங்களை வாங்கியது மாநகராட்சி நிர்வாகம். குளங்களைக் காக்கும் பொறுப்பை மாநகராட்சி எடுத்த பின்பே, இவற்றின் நிலைமை இன்னும் மோசமானது. வழக்கமாகக் கலக்கும் கழிவுநீருடன், அரசு மருத்துவமனைக் கழிவு நீரும் சேர்ந்து வாலாங்குளத்தை நாறடித்தது. வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், பெரியகுளம், முத்தண்ணன் குளம் என எல்லா குளங்களின் கரைகளிலும் கட்டடக்கழிவுகள் தினமும் குவிக்கப்பட்டுள்ளன. தட்டுத்தடுமாறி வந்துசேர்ந்த தண்ணீர் அனைத்தையும் ஆகாயத்தாமரைகள் மூடி மறைத்துள்ளன. கழிவுநீரையும், கழிவுகளையும் கொட்டுவதைத் தடுக்க அக்கறை, துளியளவும் இருப்பதாகத் தெரியவில்லை. விளைவு, கட்டடக் கழிவுகளுடன் மற்ற கழிவுகளும் குளங்களில் கொட்டப்படுவது அதிகரித்துள்ளது. சமீபகாலமாக, "செப்டிங் டேங்க்' கழிவுகளை லாரியிலிருந்து நேரடியாக குழாய் வழியாகக் கலந்து விடுவதும் அதிகரித்துள்ளது. அக்கறையற்ற அதிகாரிகள் காரணமாக, இந்த குளங்கள் அனைத்தும் வளமிழந்து, வறண்டு, மைதானங்களாகவும், கழிவுக் கிடங்குகளாகவும் மாறி வருகின்றன. முத்தண்ணன்குளத்தில் கோழிக்கழிவுகளும், மீன் கழிவுகளும் தினமும் கொட்டப்படுகிறது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, குளங்களைச் சுற்றிலும் வேலி அல்லது நடைபாதை அமைப்பது, கழிவுகளைக் கொட்டுவோர்க்கு அதீத அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் பணி; அதைச் செய்ய முடியாவிட்டால், குளங்களை மீண்டும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்து விடுவதே நல்ல நிர்வாகத்துக்கு அழகு.

No comments:

Post a Comment