Wednesday, February 16, 2011

சாய ஆலைகள் மீது விவசாயிகள் மீண்டும் புகார்: மழை பெய்யாமலேயே ததும்பும் தடுப்பணை


திருப்பூர்: திருப்பூர் அருகே சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தடுப்பணையில் தேங்கி வழிவதாக விவசாயிகள் மீண்டும் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர், வஞ்சிபாளையம் பகுதியில் அதிக அளவு சாய சலவை ஆலைகளும், தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் செயல்படுகின்றன. கரைப்புதூரில் இருந்து வஞ்சிபாளையம் வழியாக வரும் நீரோடை, தென்னம்பாளையம் அருகே ஜம்மனை ஓடையில் கலக்கிறது. அங்குள்ள சாய ஆலைகளில் கழிவுநீரை வெளியேற்றுவதால், கரைப்புதூரில் இருந்து வரும் ஓடையில், வஞ்சிபாளையம் தடுப்பணையில் தேங்கி வழிகிறது. இதனால், நிலத்தடி நீர் மாசுபட்டு, தென்னை உள்ளிட்ட அனைத்து வகையான சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


கோவை - திருப்பூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க தலைவர் துரைசாமி கூறியதாவது: மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்க, கோர்ட் நடவடிக்கை எடுத்துள்ளது. 15 நாட்களாக சாய ஆலைகளும், பொது சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்கவில்லை. ஆனால், வஞ்சிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் வற்றாமல் ஓடுகிறது. மழை பெய்தால் மட்டுமே இந்த ஓடைக்கு நீர்வரத்து கிடைக்கும்; வேறெந்த ஆதாரமும் கிடையாது. அவ்வாறு இருந்தும், சாயக்கழிவு நீரை கலப்பதால் தொடர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது. கோர்ட் உத்தரவிட்டும், இத்தகைய முறைகேடுகள் தொடர்வதாக மாசுகட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர்களிடம் முறையிட்டோம். "வழக்கு கோர்ட்டில் இருப்பதால், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது; கோர்ட்டுக்குத்தான் செல்ல வேண்டும்' என, கையை விரிக்கின்றனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், முறைகேடாக இயங்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டவில்லை, என்றார். date- 16.2.2011

No comments:

Post a Comment