திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், கடந்த இரு ஆண்டுகளில், அனுமதியின்றி இயங்கிய, 254 சாய ஆலைகளுக்கு, "சீல்' வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் சுற்றுப்புறங்களில் செயல்பட்ட சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர், எவ்வித சுத்திகரிப்பும் செய்யப்படாமல் நொய்யலாற்றில் விடப்பட்டது.
சாயக்கழிவு நீரால், ஒரத்துப்பாளையம் அணை மற்றும் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நொய்யலாற்று பாசன விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2011 ஜனவரியில் சாய ஆலைகளை மூட உத்தரவிட்டது.
மாசுக்கட்டுப்பாடு வாரிய உயரதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்தபின், சாயக்கழிவு முற்றிலும் அகற்றும், "ஜீரோ டிஸ்சார்ஜ்' முறையில் சுத்திகரிக்க, மொத்தமுள்ள, 20 பொது சுத்திரிப்பு நிலையங்களில், 18க்கு மட்டுமே அனுமதி வழங்கினர். அனுமதி பெற்றவைகளில், இரண்டு சுத்திகரிப்பு நிலையங்கள், பொருளாதார நெருக்கடியால் செயல்படாமல் உள்ளன.
செயல்பாட்டிலுள்ள, 16 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உட்பட்ட, 409 சாய ஆலைகள், 30 சதவீத சோதனை அடிப்படையில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அனுமதியின்றி செயல்படும் சாய ஆலை களை கண்டறிந்து, "சீல்' வைத்து வருகின்றனர்.
கடந்த 2011, ஜன., முதல், 2012, டிச., வரையிலான இரு ஆண்டுகளில், திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், அனுமதியின்றி இயங்கிய சிறிய அளவிலான, 232 சாய ஆலைகள், பெரிய அளவிலான, 22 ஆலைகள் என, மொத்தம், 254 சாய ஆலைகள், "சீல்' வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment