சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, திருப்பூர் நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், மாநகராட்சி கட்டடங்கள், கடந்தண்டு இடிக்கப்பட்டன. தற்போது, அதே பகுதியில், மாநகராட்சி தரப்பில் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் தார் ரோடு அமைக்கப்படுகிறது. "கட்டடங்கள் கட்டுவது தவறு; ரோடு போடுவது தப்பில்லை,' என, மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, 2011, நவ., 23ம் தேதி, திருப்பூர், நொய்யல் ஆறு அணைக்காடு பகுதியில், மூளிக்குளத்துக்கு செல்லும் வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 112 வீடுகள் இடிக்கப்பட்டன. இதேபோல், மாநகராட்சி சார்பில் 23.5 லட்சம் ரூபாய் செலவில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சமுதாய நலக்கூடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவையும் இடிக்கப்பட்டன.
நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே, அரசு நிதியை வீணடித்து, நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருந்ததும், அது இடிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, நிதியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்பிரச்னையை சமாளிக்க, அப்போதைய மாநகராட்சி அதிகாரிகள், "மாஜி' கவுன்சிலர் பெயரில், 23.5 லட்சம் ரூபாயை மாநகராட்சி கருவூலத்தில் திருப்பிச் செலுத்தினர். மீட்கப்பட்ட இடத்தில் வேலி அமைத்து பாதுகாப்பது குறித்து, பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளாமல், அறிவிப்பு பலகை மட்டும் வைத்தனர். அதனால், தனியார் ஆலை நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர், முக்கிய வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆற்றை ஆக்கிரமித்து மாநகராட்சி சார்பில் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. ரோட்டின் மறு பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவு நீர், மூளிக்குளம் வாய்க்காலில் கலக்கும் வகையில் பெரிய அளவிலான குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியால், வாய்க்கால் முழுவதும் சிதைந்துள்ளது.ஏற்கனவே, 23.5 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்தி, "கை'யை சுட்டுக்கொண்ட அதிகாரிகள், மீண்டும் அதேபோன்ற தவறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment