Wednesday, June 19, 2013

நொய்யலில் சாக்கடை கழிவுநீர் கலந்தால்... குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

""நொய்யல் ஆற்றில் சாக்கடை கழிவுநீர் திறந்து விடும், உள்ளாட்சி நிர்வாகம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் முறையீட்டுக் கூட்டத்தில், நொய்யல் ஆற்றை பாதுகாக்க அனைத்து தரப்பு விவசாயிகளும் குரல் கொடுத்தனர்.

விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி பேசியதாவது: கோவையின் வற்றாத ஜீவ நதியாக இருந்த நொய்யல், உருத்தெரியாமல் அழிந்து வருகிறது. மரங்களை வெட்டி, பாலைவனம் போல் மாற்றி விட்டதால், மழை பெய்வதும் அரிதாகி விட்டது.நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்டு சங்கிலி தொடர் போன்று குளங்கள் அமைந்துள்ளன. ஒரு குளம் நிரம்பி, இன்னொரு குளத்திற்கு தண்ணீர் செல்லும். இறுதியில் நொய்யல் ஆற்றுடன் இணைந்து விடும். நொய்யல் குளங்களிலும், நீர் வழிப்பாதைகளிலும், ஏராளமான ஆக்கிரமிப்புகள். சமீப காலமாக நொய்யலை மாசுபடுத்தும் செயலும் அரங்கேறுகிறது. சங்கனூர் பள்ளம் ஆக்கிரமிப்பால், சிங்காநல்லூர் குளத்திற்கு தண்ணீர் செல்லாது.நொய்யல் ராஜ வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டும், பொதுப்பணித்துறையினர் மெத்தனமாக உள்ளனர். சரவணம்பட்டி குளம் ஆக்கிரமிப்புக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை. அரசியல் தலையீடுகளை தவிர்த்து குளங்களையும், நொய்யலையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை. இவ்வாறு, கந்தசாமி பேசினார்.

விவசாயிகள் சங்க தலைவர் பாலு பேசுகையில், ""நொய்யல் ஆற்றில், உக்கடம் - சுண்டக்காமுத்தூர் ரோட்டில் செல்வபுரம் புட்டுவிக்கிப்பள்ளம் அருகில் சாக்கடை கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. கோவையிலுள்ள அனைத்து குளங்களிலும் கழிவுநீர் மட்டுமே தேக்கப்படுகிறது. இதனால், குளத்தின் சுகாதாரம் பாதிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டமும் மாசுபடுகிறது. சாக்கடை கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, வெளியேற்ற வேண்டும். நொய்யல் ஆற்றிலும், குளத்திலும் சாக்கடை கழிவுநீர் திறந்து விடும் உள்ளாட்சி அமைப்புகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பேசுகையில், "குளத்திலும், ஆற்றிலும் சாக்கடை கழிவுநீர் திறந்து விடக்கூடாது என மாநகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி கலெக்டருக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இந்த விளக்கத்தால் கோபமடைந்த கலெக்டர் கருணாகரன், ""உங்க வீட்டுகள் குப்பை கொட்டினால், சும்மா இருப்பீங்களா? அதுமாதிரி தான், இதுவும். நொய்யல் ஆறு, குளங்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானவை. அதை யார் மாசுபடுத்தினாலும் நடவடிக்கை எடுக்க உங்களுக்கே (பொ.ப.து.,) அதிகாரம் உள்ளது. ஒவ்வொரு விஷயத்துக்கும் "பேப்பர் ஆக்ஷன்' எடுக்காமல், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்'' என்றார்.

No comments:

Post a Comment